இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் மீள் குடியேற்றத்தின் மூலம் மறுவாழ்வு பெற்று வருகின்ற போதிலும் இன்னும் சவால்கள் எஞ்சியிருப்பதாகவே ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்திருக்கின்றது.

மனிதாபிமான நிறுவனங்களுடன் இணைந்து அரசாங்கம் உண்மையாகவே இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்காகக் கடுமையாக செயலாற்றி வருகின்ற போதிலும், மீளக்குடியமரும் மக்களுக்கான வீடுகள், தொழில்வாய்ப்புகள் என்பவற்றில் இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கின்றது என்றும் ஐநாவின் அகதிகளுக்கான ஆணையகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறியிருக்கின்றது.

வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்திருந்த சுமார் 3 லட்சம் பேரில், ஒரு லட்சத்திற்கும் குறைவானவர்களே இப்போது எஞ்சியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. ஏனையோர் மீள்குடியேற்றத்திற்காக அனுப்பப்பட்டு விட்டார்கள் என்றும் அரசாங்கம் கூறுகின்றது.

யுத்தத்தினால் பல தடவைகள் இடம்பெயர நேர்ந்த மக்கள் இப்போது அரசாங்கத்தினாலும், ஐநாவின் அகதிகளுக்கான ஆணையகத்தினாலும் வழங்கப்படுகின்ற அடிப்படைத் தேவைகளுக்கான உதவிகளைத் தவிர வெறும் கையுடனேயே தமது கிராமங்களுக்குத் திரும்பிச் சென்றிருக்கின்றார்கள்.

இறுதி யுத்தத்தின்போது 18 மாதங்களாக அவர்கள் அனுபவித்த கஸ்டங்கள் துயரங்கள் இறுக்கமான இடைத்தங்கல் முகாம் வாழ்க்கைக்குப் பிறகு சொந்த வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதில் அவர்கள் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று ஐநாவின் அகதிகளுக்கான ஆணையத்தின் தகவல் அதிகாரி ஹெலன் கோக்ஸ் கூறியிருக்கின்றார். மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு அண்மையில் அவர் விஜயம் செய்து திரும்பியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசமான நிலையில் குடியிருப்புக்கள்
மீளக்குடியமரும் குடும்பங்களுக்கு ஐநாவின் அகதிகளுக்கான ஆணையகம் வழங்கி வருகின்ற இருப்பிட வசதிக்கான நிதியுதவித் திட்டச் செயற்பாடுகளை மதிப்பிடுவதற்காக வன்னிப்பிரதேசம் மற்றும் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் மற்றும் அபிவிருத்திக்கும் கூட்டுச் செயற்பாட்டுக்குமான சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அண்மையில் சென்றிருந்தார்கள்.

மீள்குடியேற்றப் பகுதிகளில் பலதரப்பட்ட வேலைகள் இடம்பெற்று வருகின்றன; கல்வி, சுகாதாரம் உட்பட பல்வேறு அத்தியாவசிய சேவைகளுக்காக அரசாங்கம் பெரும் முதலீட்டைச் செய்திருக்கின்றது என மீள்குடியேற்ற பகுதிகளுக்குச் சென்று திரும்பியுள்ள ஐநாவின் அகதிகளுக்கான அதிகாரி ஹெலன் கோக்ஸ் கூறுகின்றார்.

ஐநா நிறுவனத்தின் இருப்பிட வசதிக்கான நிதியுதவியை மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்கள், தற்காலிக இருப்பிடங்களை அமைப்பது தொடக்கம், தமது பிள்ளைகளுக்கு உடைகள் வாங்குதற்கும், தமது போக்குவரத்திற்குத் தேவையான சைக்கிள்களை வாங்குவதற்கும் பயன்படுத்தியிருக்கின்றார்கள். எனினும் அனைத்தையும் இழந்துள்ள இந்தக் குடும்பங்களுக்கு தாங்கள் வழங்குகின்ற இந்த 25 ஆயிரம் ரூபா நிதியுதவியானது, மிகக் மிகக் குறைவானதே எனத் தெரிவிக்கும் ஹெலன் கோக்ஸ் அவர்கள், மீளக்குடியமர்பவர்களுக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய அடிப்படைத் தேவைகள் மிக மிக அதிகமாக இருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கின்றார்.

ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறை காரணமாக மார்ச் மாதத்தின் முற்பகுதியில் இருந்து ஐநா நிறுவனத்தின் இருப்பிட வசதிக்கான நிதியுதவி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றார்கள். இது குறித்து ஹெலன் கோக்ஸ் அவர்கள் அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டிருக்கின்றார்.

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s